Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Monday, August 08, 2011

சிறகு தொலைத்த ஒற்றை வால் குருவி

அடர்ந்த இருண்ட காட்டின் நடுவே
பெருத்த இரைச்சலுடன் சென்று கொண்டிருந்தது
அந்த ஒற்றை வால் குருவி

காற்றைக் கிழித்து முன் செல்ல
சிறகுகள் சில கொடுத்து கடந்தன.

அங்கெங்கும் அலைந்தபடி பறந்தோடிய
அச்சிறகு மண் தொட்ட
அந்த நிமிடம்...
முட்களோடு விளையாடிக் கொண்டிருந்த
சிறு தேவதை பூப்பெய்தினாள்.

ஈக்களும், புழுக்களும், பூச்சிகளும்
சுற்றித்திரிந்த நாட்கள் மரித்து
வண்டுகள் பூத்திடும் நந்தவனமாயிற்று

ஒற்றை வால் குருவி
விட்டுச் சென்ற சிறகினைக் கொண்டு
தன்னை அலங்கரித்துக் கொண்டாள்
அந்த சிறு தேவதை

சிறகு தொட்டு பெண்ணான கதை கேட்காது
உதிர்ந்த சிறகின் வாசனை இல்லா
தூரத்தில் பறந்து கொண்டிருந்தது
சிறகு தொலைத்த
ஒற்றை வால் குருவி

- விபாகை ர.ராஜலிங்கம்

Wednesday, July 13, 2011

ஒரு குட்டியும்... மூன்று தெருப்பொறுக்கி நாய்களும்...


கருப்பு வழிந்து ஓடும்
அந்த குளிர்காலத் தெருவில்
உருட்டும் நீலக்கண்கொண்டு
விழிங்கி முன்னேறியது
யாரோ பெய்து போட்ட
அந்த குட்டி

ஏறியும் இறங்கியும்
காலச்சலவை செய்யச் சொன்ன
அந்த செவ்வரிக்காரியின்
முலை தீண்டும் தருணங்களில்
எங்கிருந்தோ பரவியது
யாரோ விட்டுச்சென்ற எச்சம்

விடுபட்டு
விதியென்று
சென்ற போது தான்
காடுகள் தொலைத்த
இருளாய் போனது
அந்த அகண்ட வீதி

சிக்கிய நூல்கண்டின்
நுனி தேடி அலையும்
அந்த சாமவேளையில்
எலும்புடன் சண்டையிட்டது
உயிர்த்தீ

உலைகொதிக்கும்
தூரம் காண
துகிலுரிக்கும்
எவனுக்கும் தெரியாது
உண்மைக்கும் தலைக்கும் உள்ள தூரம்.

சரணாகதி ஆனாலும்
சூத்திரம் ஜெயிக்காதிருக்க
வனம் தின்றும்
உள்ளம் விழுங்கப் பாய்ந்திடும்
அந்த
மூன்று தெருப்பொறுக்கி நாய்கள்.

- விபாகை. ர. ராஜலிங்கம்.
Related Posts Plugin for WordPress, Blogger...