Monday, February 21, 2011

நாட்களும் நேரமும் - தினம் ஒரு கவிதை


நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.
விடியலின் புதையலை நோக்கி
வாளெடுத்து மற்றொரு பயணம்.
நாம் பயணப்படும் நோக்கு
தொலை(ந்த) நோக்காகவே !
காலம் கடந்து; கானல் நீருண்டு
காணாத கனவிது.
சிறுதுளி தஞ்சம் புகும்
தேவைகளின் தேடலில்,
நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.



Thursday, February 17, 2011

பிணத்தின் ஜனனம் - தினம் ஒரு கவிதை



விரிந்து கிடந்திட்ட
மயான இருட்டில்
சிவந்து கொண்டிருந்த
சவக்குழியில்
கனந்து இறங்கும்
விறகுகள்;
உடல் வெந்துண்டு
அனல் பரவிட
பிணத்தின் கருவறையில்
மீண்டும் ஒரு
பிணத்தின் ஜனனம்.

Friday, February 11, 2011

வீதியெங்கும் விளக்குகள் - தினம் ஒரு கவிதை

வீதியெங்கும் விளக்குகள்
இருளகற்றி
எண்ணெய் விட்டு
சுட்டெரியும் அழகு.

மண்ணெண்ணெயே இல்லா
அடுகளையில்
நல்லெண்ணெய் விட்டா
நளபாகம் உருவாகும்?

விளக்கின் அடியில்
வழித்தெடுத்தால்
ஒருவேளை உண்ணவாவது
வழி கிடைக்கும்.

உணவின் உரசலின்றி
எண் குடலும்
குருதிப்புன்னகை
பூசிக் கொண்டது.

வீதியெங்கும் விளக்குகள் !!!

Wednesday, February 09, 2011

ஆரிய குளிப்பு - தினம் ஒரு கவிதை



பனித்துளி கன்னத்தில்
சூரிய முத்தம்
வழியும் இதழில்
வாசனைச் சுத்தம்
பரவும் உடலில்
உணர்ச்சி பூகம்பம்
வெடிக்கும் பூவில்
உயிரின் சத்தம்.
ஆறிடும் தவிப்பு,
ஆரிய குளிப்பு.

Tuesday, February 08, 2011

விடிந்தன கனவுகள் - தினம் ஒரு கவிதை

காலத்தின்
சவுக்கடியில்
இரத்தக்கீறல்கள்.
ரணமும் வலியும்
சுகமாய் இருந்தன,
நினைவுத் தழும்புகள்
மறையும் வரை.
காலடிச் சத்தத்தில்
விடிந்தன கனவுகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...