Friday, March 11, 2011

மச்சக்காரன் - தினம் ஒரு கவிதை











தெரு முக்காடு போட்டுக்கொண்டது
பெண்கள் புசு புசுத்தனர்
ஆண்கள் மெளனமாய் அழுதனர்
உறவைத்தேடி ஒரு கூட்டம்
ஊமையாய் தேடியது.

காலையில் வீழ்ந்தது
மாலையும் கடந்தது
விட்டுவிடவும் முடியாது
வெட்டிவிடவும் முடியாது
திண்டாடியது ஒரு கூட்டம்

சரி சரி அப்படியே போடமுடியாது
காரியங்கள் விருவிருப்பாயின
சடங்குகள் சடலத்திற்கெதற்கு
சொர்க்கம் பார்க்க இன்னும்
எத்தனையோ இருக்கப்பா!

உலகம் பார்த்த உடலில்
உள்ளம் தேடிப் பார்க்கிறான்
எரிகின்ற நெருப்பின் வெப்பத்தில்
அவள் விற்ற உடலில்
'மச்சக்காரன்' பச்சையாக

அய்யய்யோ...
வெட்டியனாய் வைத்த கொள்ளி
கட்டியவனாய் முடியவில்லையே
இவன் 'மச்சக்காரன்'
தாலிக்கு சொந்தக்காரன்.

Monday, February 21, 2011

நாட்களும் நேரமும் - தினம் ஒரு கவிதை


நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.
விடியலின் புதையலை நோக்கி
வாளெடுத்து மற்றொரு பயணம்.
நாம் பயணப்படும் நோக்கு
தொலை(ந்த) நோக்காகவே !
காலம் கடந்து; கானல் நீருண்டு
காணாத கனவிது.
சிறுதுளி தஞ்சம் புகும்
தேவைகளின் தேடலில்,
நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.



Thursday, February 17, 2011

பிணத்தின் ஜனனம் - தினம் ஒரு கவிதை



விரிந்து கிடந்திட்ட
மயான இருட்டில்
சிவந்து கொண்டிருந்த
சவக்குழியில்
கனந்து இறங்கும்
விறகுகள்;
உடல் வெந்துண்டு
அனல் பரவிட
பிணத்தின் கருவறையில்
மீண்டும் ஒரு
பிணத்தின் ஜனனம்.

Friday, February 11, 2011

வீதியெங்கும் விளக்குகள் - தினம் ஒரு கவிதை

வீதியெங்கும் விளக்குகள்
இருளகற்றி
எண்ணெய் விட்டு
சுட்டெரியும் அழகு.

மண்ணெண்ணெயே இல்லா
அடுகளையில்
நல்லெண்ணெய் விட்டா
நளபாகம் உருவாகும்?

விளக்கின் அடியில்
வழித்தெடுத்தால்
ஒருவேளை உண்ணவாவது
வழி கிடைக்கும்.

உணவின் உரசலின்றி
எண் குடலும்
குருதிப்புன்னகை
பூசிக் கொண்டது.

வீதியெங்கும் விளக்குகள் !!!

Wednesday, February 09, 2011

ஆரிய குளிப்பு - தினம் ஒரு கவிதை



பனித்துளி கன்னத்தில்
சூரிய முத்தம்
வழியும் இதழில்
வாசனைச் சுத்தம்
பரவும் உடலில்
உணர்ச்சி பூகம்பம்
வெடிக்கும் பூவில்
உயிரின் சத்தம்.
ஆறிடும் தவிப்பு,
ஆரிய குளிப்பு.

Tuesday, February 08, 2011

விடிந்தன கனவுகள் - தினம் ஒரு கவிதை

காலத்தின்
சவுக்கடியில்
இரத்தக்கீறல்கள்.
ரணமும் வலியும்
சுகமாய் இருந்தன,
நினைவுத் தழும்புகள்
மறையும் வரை.
காலடிச் சத்தத்தில்
விடிந்தன கனவுகள்.

Monday, December 20, 2010

“வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா

அன்பு நிலாரசிகனின் நான்காவது கவிதை தொகுப்பு “வெயில் தின்ற மழை” நூல் வெளியீட்டு விழா.

தேதி : டிசம்பர் 26
இடம்: தேவ நேயர்பாவாணர் மாவட்ட மைய நூலகம்.
நேரம் : மாலை 6 மணி

நண்பர்கள் கலந்துகொண்டு கவிஞர் நிலாரசிகனை வாழ்த்துமாறு வேண்டுகிறேன்.

மேலும் மேலும் உச்சங்களை அடைய வேண்டும்.
வாழ்த்துகிறேன்.

விபாகை

Wednesday, October 27, 2010

நீ

வாழ்ந்த போது
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.

மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.

----------------------------------

உன் இதயத்துடிப்பின்
இசை கேட்டு
துயில வேண்டும்.

விழியில் மறுத்த‌
தூக்கம்
உன் மடியில் வந்தது.

----------------------------------

சற்றே பறித்த
அழகிய மலருடன்
உன்னை சந்தித்தேன்
மலரொன்றும்
அத்தனை அழகில்ல தான்.

----------------------------------

நீ
கடந்து சென்று
திரும்பி பார்க்கிறாய்.
புயல் கடந்து
தென்றல் வீசியது.

– விபாகை

Friday, November 27, 2009

எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.


(ஆன்மீகத்தில் தன்னை முழுவதுமாக அர்பணித்து, அனுபவித்து உணர்ந்திட்ட வரிகள். பாடிப்பாருங்கள். உள்ளம் கரைந்து உணர்வீர்கள்.)


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

யாமொரு பிச்சை பாத்திரம்

ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு

சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு

சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


அம்மையும் அப்பனும் தந்ததா?…..

இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?.....

அம்மையும் அப்பனும் தந்ததா?

இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா?

இம்மையை நான் அறியாததால்…..

இம்மையை நான் அறியாததால்

சிறு பொம்மையின் நிலையினில்

உண்மையை உணர்ந்திட ,

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


அத்தனை செல்வமும் உன்னிடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்…

அத்தனை செல்வமும் உன்னிடத்தில்

நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில்

அதன் சூத்திரமோ அது உன்னிடத்தில்

ஒருமுறையா…. இருமுறையா…

பலமுறை பலபிறப்பெடுக்க வைத்தாய்.

புது வினையா…. பழ வினையா…

கனம் கனம் தினம் எனை

துடிக்க வைத்தாய்.

பொருளுக்கு அலைந்திடும்

பொருளற்ற வாழ்க்கையும்

துரத்துதே…..

உன் அருள் அருள் அருள் என்று

அழைகின்ற மனம் இன்று

பிதற்றுதே….

அருள் விழியால் நோக்குவாய்

மலர் பதத்தால் தாங்குவாய்

உன் திருக்கரம் எனை அரவணைத்து

உனதருள் பெற

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!

பிண்டம் என்னும் எலும்பொடு சதை நரம்புதிரமும்

அடங்கிய உடம்பு எனும்

பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்

அய்யனே! என் அய்யனே!!


‘இசைஞானி’ இளையராஜா எழுதி இசையமைத்து பாடிய பாடல்

– ‘ரமணமாலை’ எனும் இசைத் தொகுப்பிலிருந்து.

இன்றைய சிந்தனை

வாழ்க்கையின் தத்துவம் தேடித் திரிகின்றோம். உன்னைத் தேடினால் வாழ்க்கை கூடிவரும்
Related Posts Plugin for WordPress, Blogger...