Friday, June 30, 2006

'இமைப்பொழுது' - இமை - 7


'இமைப்பொழுது' - இமை - 7


காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையிலேயே உறைந்து போனாள் கீதா.
நடக்க கூட முடியாமல் வந்த சுந்தரை டிரைவர் தான் தாங்கி பிடித்து அழைத்து வந்தான், 'என்னங்க... என்ன ஆச்சு' என்று அலறிய கீதாவிடம் ' ஒண்ணுமில்லம்மா, முதல்ல சாரை உள்ளே கூட்டிட்டு போயி படுக்க வைங்க சொல்லுறேன்', என்றான் டிரைவர்.

சுந்தரை தன் தோளில் தாங்கி படுக்கை அறையில் படுக்க வைத்தாள். உடனே வெளியே வந்து டிரைவரிடம், ' என்னப்பா ஆச்சு?' என்றாள்.
'அது ஒண்ணும் இல்லமா? அது வந்து...... அது வந்து...... ' என இழுக்க ஆரம்பித்தான் டிரைவர்.
'என்ன வந்து.... போயின்னு இழுக்குற...... என்ன நடந்ததுன்னு சொல்லப் போறயா. இல்லையா?' என சிறிது அதட்டலாகவே கேட்டாள்.
'அது வந்து...... நம்ம ஆபீஸ்ல இருக்குற சுனிதாவிற்கும் நம்ம அய்யாவுக்கும் ரொம்ப நாளா பழக்கம் இருக்குமா'
'பழக்கம்னா?' கீதாவின் குரலில் ஆயிரம் குழப்பங்கள்.
'அப்பப்ப் இரண்டு பேரும் வெளில போவாங்க.... வருவாங்க....'
'வெளில போறதுல்லாம், ஒரு தப்பாப்பா, அத நீயும் சொல்லுறயா?'
' வெளிலனா, மைசூர், ஊட்டி, அப்படின்னு.......'
'ஆனா, சுனிதாவுக்கு அங்க அண்ணன் வேற மாப்பிள்ள பார்க்க.... நம்ம அய்யா போயி தடுத்திருக்காரு. அது பெரிய பிரச்சனையாகி, அய்யாவை ஆபிஸ்க்கு வெளியில வைச்சு அடிச்சிட்டாங்க.... நல்ல வேளையா ஒண்ணும் பெரிசா அடி படல.'
கீதாவிற்கு தலை சுற்றிக் கொண்டு வந்தது, மயங்கி கீழே விழுந்தாள்.

********** கட் 0012 ஷாட் மாத்துப்பா *************

ஆஸ்பத்திரில் கீதா கண் விழித்த போது, அவள் பக்கத்து வீட்டுத் தோழி ரம்யாவும் அவள் கணவன் குமாரும் நின்றிருந்தனர். ரம்யாவைப் பார்த்தவுடன் கீதாவிற்கு அழுகை பீறிக்கொண்டு வந்தது.


'என்னோட நிலைமையப் பாத்தியா, ரம்யா' என கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தாள்.
'ஏய் கண்ரோல் யுவர்செல்ப், என்ன ஆச்சு? ஏன் மயங்கி விழுந்த? ரவிசுந்தரையும் அடுத்த வார்டுல தான் அட்மிட் பண்ணியிருக்கோம். இன்னைக்கு ப்லிம் போறதா தானே சொன்ன? அப்புறம் என்ன இப்படி?' என ஆயிரம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தாள் ரம்யா.
நடந்ததைக் கூறிய கீதாவை நம்ப முடியாமல் பார்த்தனர் ரம்யாவும், குமாரும்.
இல்ல கீதா, சுந்தர் அப்படி நடக்கக் கூடிய ஆள் இல்ல... இதுல ஏதோ தப்பு நடந்திருக்குன்னு ரம்யா கூறியதைக் கேட்கக் கூடிய மன நிலையில் கீதா இல்லை.

'உங்கள பார்க்க சுனிதான்னு ஒருத்தங்க வந்திருக்காங்க.. உள்ள விடவா?' என கேட்டாள் நர்ஸ்.

- இமை இன்னும் திறக்கும்.

Thursday, June 29, 2006

'இமைப்பொழுது' - இமை - 6


'இமைப்பொழுது' - இமை - 6


மேண்டரினில் (சீன மொழி) இருந்த அந்த துண்டுச்சீட்டில், லண்டனில் உள்ள ஓர் வங்கியில் உடனே 1 லட்சம் மலேசிய டாலர் கட்டும் படி ராகவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

யூ குய்ங் விரைவாக செயல்பட ஆரம்பித்தாள். இரு மின்னஞ்சல்கள், ஒரு போன்கால் தான், சரியாக லண்டன் நேரம் 2.00 மணிக்கு ரவிசுந்தர் கூறிய வங்கி கணக்கில் இந்திய ரூபாயில் 10 லட்சம் வரவு வைக்கப்பட்டது.

********** கட் 0010 ஷாட் மாத்துப்பா *************

'மம்மி...! டாடி எப்ப வருவாரு?' என்று கேட்ட சித்ராவை முறைத்துவிட்டு தனது வேலையில் கவனம் செலுத்த தொடங்கினாள் கீதா.
மீண்டும் சித்ரா,'நான் கேட்டதுக்கு பதில் சொல்லு மம்மி... டாடி எப்ப வருவாங்க?'
'அந்த மனுஷன் எங்க இருக்காரோ? எங்க சுத்துறாறோ? எவளுக்குத் தெரியும்.. அப்ப அப்ப காணாம போயிட வேண்டியது.. அவனவன் ஏன் கிட்ட வந்து கேட்டுக்கிட்டு. இந்த தடவை வரட்டும் இரண்டுல ஒன்னு பாத்திடுறேன்.'
'ஏண்டி மாப்பிள்ள, ஆபிஸ் விசயமா ஊருக்குப் போயிருக்கார்னு சொன்ன? இப்ப வேற என்னமோ சொல்ற? என்ன விசயம்.' என்ற படியே வந்தாள் கீதாவின் அம்மா.
'ம்ம்ம்ம்ம்.... ஒண்ணுமில்லமா, சும்மா தான், அப்ப அப்ப ஆபீஸ் விசயமா எங்கயாவது போயிடுறாருல அது தான் அப்படி சொன்னேன்' என சமாளித்தாள் கீதா.
'என்னமோடி, நீ சொல்றதுல எனக்கு ஏதும் நம்பிக்கையில்ல..... வாம்மா சித்ரா கண்ணு, பாட்டி உனக்கு கத சொல்லுறேன்' என்று சித்ராவை அழைத்துக்கொண்டு சென்றாள் கீதாவின் அம்மா.
அம்மாவிடம் தன்னால் நடிக்க முடியாதை எண்ணி வருந்தினாள் கீதா.
எல்லாத்துக்கும் காரணம் அந்த சுனிதா தான். கீதாவின் எண்ணம் பின்னோக்கி சென்றது.


********** கட் 0011 ஷாட் மாத்துப்பா *************

அன்று கீதாவின் பிறந்த நாள். மாலை குடும்பத்துடன். 'சப்வே' சென்று விட்டு, அப்படியே மல்டிப்ளக்ஸில் 'சிவகாசி' படம் பார்ப்பதாக ஏற்பாடு.
காலையில் நன்றாக, மிகவும் கலகலப்பாக சென்ற ரவிசுந்தர், மாலை கசங்கிய காகிதமாய் திரும்பியதைக் கண்டு உண்மையில்யே உறைந்து போனாள் கீதா.

- இமை இன்னும் திறக்கும்.

Wednesday, June 28, 2006

'இமைப்பொழுது' - இமை - 5

'இமைப்பொழுது' - இமை - 5
********** கட் 0007 ஷாட் மாத்துப்பா *************

'கருடா மால்' - காலை - 9.00 மணிக்கு இன்னும் விழித்துக் கொள்ளவேயில்லை. தனது புதிய மாருதி ஸ்விப்டை பார்க்கிங் செய்துவிட்டு மேலே வந்தார் திலீப் குமார். சில முக்கிய வேலையாக (அதுவும் உளவு பார்க்க போகும் போது) தனது அலுவலகக் காரை அவர் உபயோகப்படுத்துவதில்லை.

தனது செல்லிடபேசியில் ப்ரியாவை அழைத்தார். ரிங்க் போகுமுன் 'ஹாய்!' ப்ரியாவின் குரல் தான், திரும்பினார். எதிரே 7up பாட்டிலாக ப்ரியா நின்றிருந்தாள்.

ஹாய்! ப்ரியா, எப்படி இருக்க? புன்னகைத்த படி கேட்டார் திலீப்குமார்.
'பாத்தா தெரியல' என நக்கலாக கேட்ட ப்ரியா, நேராக விசயத்திற்கு வந்தாள்.
'SMS செய்தி உண்மை தான், திலீப். நீங்க உடனே ஆக்சன் எடுக்கணும்'
'ராகவன் யாருக்காக பணம் அனுப்பப்போறார்னு உனக்கு ஏதாவது தெரியுமா?
'அது தெரிஞ்சா நான் ஏன் உங்க பின்னால சுத்தப் போறேன்'
'சரி, அப்ப இந்த கேஸ்ல நாம அவசரப் பட வேண்டாம்' என்ற திலீப் தனது திட்டத்தை ப்ரியாவிடம் விளக்க ஆரம்பித்தார்.

(பின்னனி இசை ஒலிக்க, கேமராமேன் ட்ராலி ஷாட்ல 'கருடா மால்' உச்சிக்கே சென்று விட்டார்.)

ஒருபுறம் ப்ரியா தனது ஹோண்டாவில் பறக்க மறுபுறம் திலீப் தனது ஸ்விப்டில் ஏறினார்.

********** கட் 0008 ஷாட் மாத்துப்பா *************

ராகவன் தனது மடிக்கணணியில் தனது மின்னஞ்சல்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
'Urgent from RS' என்ற மெயிலை திறந்த போது அது ரவிசுந்தரின் மின்னஞ்சல் எனத் தெரிந்தது.
'ஓ! இன்னைக்கு பத்து லட்சம் அனுப்பணுமோ?' லேசாக யோசித்த ராகவன். மின்னஞ்சலில் இருந்த வங்கிக்குறியீட்டு எண்ணை குறித்துக் கொண்டார்.
ஏற்கனவே, வருமானவரித் துறையின் பார்வை ராகவனின் மேல் பலமாக இருக்கு. எப்படி பணம் அனுப்புவது.. தீவிரமாக யோசிக்கலானார்.

********** கட் 0009 ஷாட் மாத்துப்பா *************

மலேசியாவின் கேயெல் நகரில் ஒரு பல அடுக்குமாடிக் குடியிருப்பு. மலேசிய நேரம் காலை 12.00 மணி.
'டக், டக் ' - கதவு தட்டப்படும் ஓசை கேட்டு திறந்தாள் யூ குய்ங் சூ.
யாரையும் காணாது வியந்த அவள், தனது கடிதப்பெட்டியில் இருந்த துண்டுச்சீட்டை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.
மேண்டரினில் (சீன மொழி) இருந்த அந்த துண்டுச்சீட்டில், லண்டனில் உள்ள ஓர் வங்கியில் உடனே 1 லட்சம் மலேசிய டாலர் கட்டும் படி ராகவன் கேட்டுக் கொண்டிருந்தார்.

---- இமை இன்னும் திறக்கும்
1 : (லண்டன், மலேசியா ன்னு நல்லா சுத்துறானுக.... பாவம் தயாரிப்பாளர். :( )
2 : (அடுத்து எந்த ஊருக்கு போறாங்கன்னு பாப்போம்)

இயக்குனர் : விபாகை

Tuesday, June 27, 2006

இமைப்பொழுது - இமை - 4

ஊடகமனிதன் வழங்கும்....
இமைப்பொழுது - இமை - 4

Message 2:
'Check for Industrialist Raghavan's Account today - Misuse of 10 lakhs to London - yours lovingly 'PRIYA' '.
அதிர்ந்தார் திலீப்குமார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு 'ப்ரியா' -விடமிருந்து SMS.

செய்தியைக் காட்டிலும், ப்ரியாவுடன் மீண்டும் ஒரு முறை வேலைப் பார்க்கப் போவதைப் பற்றி நினைத்தாலே இனித்தது திலீப்குமாருக்கு. கவிதா அருகில் இருக்காளா? என்று நோட்டம் விட்டுக் கொண்டே செல்லிடபேசியில் 'ப்ரியா'வை அழைத்தார்.

'டைலாமோ டைலாமோ....' என்ற ஹலோ ட்யூன் ஒலித்தது ப்ரியாவின் செல்லிடபேசியில். (காதல் சந்தியாவின் இடத்தில் ப்ரியாவை நினைத்து பார்க்கத் தவறவில்லை அவர்)

'ஹாய்! திலீப் டார்லிங் ' - அய்யோ..... ப்ரியாவே.. தான்......
' இன்னும் நீ மாறவே இல்லையா?'
'எப்படி டியர் மாற்றது, இன்னைக்கு நேத்து பழக்கமா என்ன?' ப்ரியாவின் குரலில் அளவுகடந்த கனிவிருந்தது.
' சரி,... சரி மேட்டருக்கு வா?'
'ஓ! சுவீட், அப்ப 'சன்னீஸ்'-ல டின்னர் முடிச்சுட்டு அப்படியே போயிடலாம். ஓக்கேயா?'
'நீ அதுலையே.... இரு..' 'அந்த மேட்டர் இல்ல...' SMS மேட்டர்ரா !'
'ஓ அதுவா! இப்ப டைம் 6.45. சுமார் 9 மணிக்கு கருடா மால் வந்திரு, ஓக்கே?' - கட் செய்தாள் ப்ரியா.

1:(ப்ரியாவும், திலீப்பும் போலீசாருங்களா? இல்ல போலி சாருங்களா? )
2: ( 'லீ' ரெட் டேப் - ஜீன்ஸ் போட்டு டைட் டாப்ஸ் போட்டுக்கிட்டு சும்மா கலக்குறாயா? - ம்ம்ம்ம் கொடுத்துவச்ச திலீப்குமார். )
இயக்குனர்: டேய்! ஜொல்லுவிடாதீங்கடா? விழியா? எங்க இருக்கப்பா??? உனக்கு போட்டியா... நிறைய ஆளுங்க இருக்காங்கப்பா....

- இமை இன்னும் திறக்கும்

இயக்குனர்: விபாகை

Monday, June 26, 2006

இமைப்பொழுது - இமை - 3

ஊடகமனிதன் வழங்கும்....
இமைப்பொழுது - இமை - 3
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது. செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார். அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது. குழப்பத்தில் புருவம் சுழித்து, செல்லிடபேசியை கையிலெடுத்தார்.

இயக்குனர்: கேமராமேன்! கேமராவை கையில வைத்துக்கிட்டு சும்மா ஒரு பத்து நிமிசம் சுத்தி சுத்தி வாப்பா.

கேமராமேன்: அய்ய்ய்ய்ய்யா..... சான்ஸ்யா??

1: ( ஆரம்பிச்சுட்டாங்கடா? )
2: (கொஞ்சம் வித்தியாசமாத்தான் யோசிங்கலேம்ப்பா??? :( )

விரல்கள் 'Call' பொத்தானை அழுத்த 'ஹலோ! ' - இது சுந்தரின் குரல் தான்.
எதற்காக ரவி தனக்கு தொலைபேசுகிறான் என்பது புரியாமல் ராகவன் 'ஹலோ! ரவி' - என்றார்.
'ராகவ், நான் லண்டன்ல இருந்து பேசுறேன். நீங்க எனக்கு ஒரு உதவி செய்யணும்', என்றான்.
'லண்டன் !!!?? என்ன சொல்ற சுந்தர், உன்னைய எல்லாரும் இங்க காணோம்னு தேடிக்கிட்டிருக்காங்க... நீ என்னடான்னா... லண்டனிலிருந்து பேசிறேன்னு சொல்லுற....' கொஞ்சம் அதட்டலான குரலிலும், ஆனால் கனிவாகவும் கேட்டார்.
'ராகவ், நான் அத அப்புறமா சொல்லுறேன். எனக்கு இப்போ அவசரமா, ஒரு 10 லட்சம் வேண்டியிருக்கு. அதுவும் நாளைக்கே. உடனே, வெஸ்டர்ன் யூனியன்-ல அனுப்புங்க. அக்கவுண்டிங் டீடைல்ஸ உங்களுக்கு உடனே இமெயில்-ல அனுப்புறேன்'.
10 லட்சமா? என அதிர்ந்த ராகவன் பின்பு, சரி அனுப்புறேன் என்றார்.
'அப்புறம் ராகவ், நான் பேசினேன்னோ, லண்டன்ல இருக்கேன்னோ, யார் கிட்டேயும் சொல்ல வேண்டாம், குறிப்பா கீதாவுக்கு சொல்ல வேண்டாம். ப்ளீஸ்!' என்றான் சுந்தர்.
'சரி' என்றாலும் ராகவனின் குரலில் அத்தனை திருப்தியில்லை.

********** கட் 0005 ஷாட் மாத்துப்பா *************

'காபி டியர்' - என்றபடி எழுப்பிய மனைவியை கட்டிப்பிடித்து 'அதுக்குள்ளேயா?' என்றார் துணை போலீஸ் கமிஷனர் திலீப்குமார்.
' சீப்போங்க' சிணுங்கிய படி விழகிய கவிதா 'முதல்ல காபி குடிங்க' என்றாள்.
காபியை குடித்துக் கொண்டே, தன் செல்லிடபேசியை எடுத்தார் திலீப்குமார்.
'2 Messages Received' செல்லிடபேசியில் பதிவாகியிருந்தது.
' தனக்கும் சிலர் காலைவாழ்த்து செய்திகள் அனுப்புகிறார்களா என்ன ? ' - செய்திகளை படிக்க ஆரம்பித்தார்.
Message 1:
'You are so lucky to have me as a wife. - Good Morning ' - கவிதாவிடம் இருந்து தான் இந்த செய்தி. புன்னைகையோடு அடுத்த செய்திக்கு தாவினார்.
Message 2:
'Check for Industrialist Raghavan's Account today - Misuse of 10 lakhs to London - yours lovingly 'PRIYA' '.
அதிர்ந்தார் திலீப்குமார்.

---- இமை இன்னும் திறக்கும்

1 : (மெகா தொடரா? இல்ல சஸ்பென்ஸ் தொடராப்பா? )
2 : (சரி சரி, ஏதோ ஒண்ணு, எப்படித்தான் கத போகுதுன்னுப் பாப்போம்.)
இயக்குனர் : விபாகை

Friday, June 23, 2006

இமைப்பொழுது - இமை - 2

ச்சூ...................... ( Sound Effect)
ஊடகமனிதன் வழங்கும்....
ச்சூ...................... ( Sound Effect)
இமைப்பொழுது
ச்சூ...................... ( Sound Effect)
இமை - 2
ச்சூ...................... ( Sound Effect)
1: (ஏய்... டைட்டில் போட்டுட்டாங்கப்பா... சீக்கிரம் வாடா)
2: (அட பாட்டு முடிய இன்னும் 5 நிமிசம் ஆகும். அப்புறம் வர்றேன்)
இயக்குனர்: பாட்டெல்லாம் இல்லப்பா... உடனே ஸ்டார்ட் தான்.

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில் ஆயிரம் கேள்விகள். சித்ராவின் காலை எடுத்து மெல்ல படுக்கையில் வைத்து எழுந்தாள். மிகப்பெரிய பணக்காரர்கள் மட்டுமே வாழக்கூடிய பலமாடி அடுக்குக் குடியிருப்பு அது. இந்நேரம் அவ்வளவு எளிதாக யாரும் உள்ளே நுழைந்துவிட முடியாது..

காவல்காரரோ..... பக்கத்து வீட்டு குமரன் சாரோ..... இல்ல... அவனோ !!! ??? படுக்கை அறையிலிருந்து வாசல் வரை செல்லும் முன், அவள் நினைவில் பலர் வந்து போனார்கள்.

தற்காப்பு சங்கலியைப் போட்டுத்தான் கதவைத் திறந்தாள். அவளால் நம்ம முடியவில்லை. அம்மா! நீ எப்படிம்மா இங்க! ஆச்சரியத்தில் கதவைத் திறக்கவே மறந்து நின்று விட்டாள். குழம்பிய அவள் முகத்தில் நிம்மதி... சந்தோசம்... திகைப்பு...! என்னடி கதவைத் திறக்க மாட்டாயா? என்று அம்மா கேட்டப் பிறகு தான் அவளுக்கு சுயநினைவு வந்தது. கல்யாணத்திற்கு பின் அம்மா வீட்டிற்கு வந்தால் மகள் எவ்வளவு சந்தோசப் படுவாள் என்பது அனுபவித்தால் தான் தெரியும்.

என்னடி மாப்பிள்ளையக் காணேம்? அம்மாவின் கேள்விக்கு பதில் தெரியாது விழித்தாள். பின் சமாளித்து அலுவலக வேலையா வெளியூர் போயிருக்கார்னு சொன்னதை அம்மா நம்பியதாகத் தெரியவில்லை. 25 வருட ஆசிரிய வாழ்க்கையில் இப்படி பொய் பேசிய எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பாள். ஒரு சந்தேகப் பார்வைப் பார்த்து விட்டு தன் பேத்தியைப் பார்க்கப் போனாள்.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

ஹாய்! மாம்ஸ்! என்னடா இவ்வளவு லேட்டா வர்ற... இரண்டாவது சுற்றில் இருந்த ஸ்டீவன், கார்த்திக்கைப் பார்த்துக் கண்ணடித்தான். சேரை இழுத்துப் போட்ட கார்த்திக் சர்வரிடம் ஒரு கிங்பிஷர் கொண்டு வரச் சொல்லி விட்டு சிரித்துக் கொண்டே உட்கார்ந்தான்.
'இல்ல மச்சி, வர்ற வழில ஒரு பொண்னைப் பார்த்தேன்டா! இன்னும் என் கண்ணுக்குள்ளயே இருக்கான்னா பார்த்துக் கோயேன்.'
'அப்படியா! கொஞ்சம் கண்ணைக்காமி பார்க்கலாம் ' என்றான் ஸ்டீவன் கிண்டலாக.
'போடா...' என்றான் சிரித்துக் கொண்டே.
'மாம்சு, பொண்ணு யாருடா?'
'அதான் தெரியலடா?' என்றான் கிங்பிஷரை சுவைத்துக் கொண்டே.

********** கட் 0000 ஷாட் மாத்துப்பா *************

'ஐஸ்சு... சாப்பிட வாடா' மாடியைப் பார்த்து கூப்பிட்டார், ராகவன்.
'டாட், நான் சாப்பிட்டாச்சு டாட்' - என்றபடியே இறங்கி வந்தாள் ஐஸ்வர்யா.
'சாப்பிட்டையா? எங்க...'
'டாட்... என் பிரண்டு ஒருத்திக்கு இன்னைக்கு பெர்த் டே, சோ, பார்ட்டிக்கு போயிட்டு வர்றேன்'
'பார்ட்டியா?' எங்கடா?'
'ஹோட்டல் லீ மெரிடியண்ட், டாட்'
'ஓ! அங்க சுந்தர் அங்கிளப் பார்த்தியா?'
'இல்ல டாட். ஏன் டாட்?'
'சுந்தர் கொஞ்ச நாளா க்ளப்-க்கு வரல. அதான் நீயாவது பார்த்தியான்னு கேட்டேன். சாயந்திரம் ஆச்சினா 'ஹோட்டல் லீ மெரிடியண்ட்'-ல தானே இருப்பான்..... அதான்'
'இல்ல டாட். வேணும்னா ராஜேஷ்ட்ட கேட்கவா டாட்?'
'வேணாம்மா, நான் பார்த்துக்கிறேன். சரி சரி லேட்டாயிடுச்சு, நீ போய் தூங்கு.'
'சரி டாட்'
'ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்... ' - ராகவனின் செல்லிடபேசி துடித்தது.
செல்லிடபேசியை கையில் எடுத்து பார்த்தார்.
அதில் 'சுந்தர்' - என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

---- இமை இன்னும் திறக்கும்

1 : (ஆகா... இன்னைக்கு வெள்ளிக்கிழமை வேற.. சனி, ஞாயிறு தொடர் உண்டா? இல்லையா?)
2 : (என்னடா? இரண்டாவது எபிசோடுலையே இப்படி பொலம்புற? சரி சரி நாளைக்கு பார்ப்போம். என்ன ஆகுதுன்னு.)
இயக்குனர் : (உதவி இயக்குனர்கள் எல்லாம் சனி, ஞாயிறு லீவு வேணும்னு கேக்குறாங்கப்பா... பாவம் வாரத்தில இரண்டு நாளாவது நம்ம மக்கள் நல்ல இருக்கட்டும்.. திங்கள் கிழமை வந்து வச்சுக்கிறேன்.)

இயக்குனர் : விபாகை

Thursday, June 22, 2006

இமைப்பொழுது - ஒரு மெகா கதை

ச்சூ...................... ( Sound Effect)

ஊடகமனிதன் வழங்கும்.... (அட வேற ஒன்னும் இல்லீங்க.. (MediaMan Presents) தான்)

ச்சூ...................... ( Sound Effect)

இமைப்பொழுது

ச்சூ...................... ( Sound Effect)

இமை - 1

ச்சூ...................... ( Sound Effect)

1 : (என்னையா.... வெளம்பரமெல்லாம் போடலையா?.. கொஞ்சம் வெளில போயி தம் போடலாம்ன்னு பாத்தா? என்னப்பா.... சத்தத்தையே காணோம்...)

2 : (அட நீ வேற! அந்தா இந்தான்னு இப்பதான் டைட்டிலே போட்டிருக்காய்ங்கே... இனி இவிங்கே கத சொல்லி... அட பாவம்டா... இந்த முத்தமிழ் குடும்பம்....)

இயக்குனர் : (டேய்... முட்டாப்பசங்களா... இப்பதான் ஒரு வழியா நம்ம முத்தமிழ் மக்கள சரிக்கட்டி டைட்டில் போட்டிருக்கேன்... அதக் கெடுத்துறாதிங்கடா.... ப்ளீஸ்!)

சாயந்திரம் பெய்த மழையினால், ஜன்னல் வழியாக காற்று ஜில்லென்று வீசியது. காற்றில் ஆடிய அவளின் முடியை சுந்தர் பார்த்திருந்தால் இந்நேரம் கவிதை மட்டுமல்ல... கன்னத்தில் ஓர் ஓவியமே அல்லவா! வரைந்திருப்பான். கீதா கண்மூடி கண்ணீர் குளித்தாள்.

இரவின் தனிமை அவளை உண்மையில் மிகவும் வாட்டியது. இன்றோடு 14 நாட்களாகி விட்டது தன் மீது கால் போட்டுத் தூங்கும் 5 வயது சித்ராவை பார்த்ததும் கீதாவிற்கு கண்ணீர் அரசியல்வாதியின் தேர்தல் வாக்குறுதியாய் பெருக்கெடுத்து ஓடியது. சுந்தரால் எப்படி முடிந்தது? என்னையை விட அவனுக்கு சித்ராவின் மீது தான் எத்தனை பாசம்? அப்புறம் ஏன் இப்படி? கேள்விகள் அவளை தின்று கொண்டிருந்தது.

டக் டக்... டக் டக்... (கதவு தட்டும் ஓசை)

கண் திறந்து தனது செல்லிடபேசியில் நேரம் பார்த்தாள். இரவு 11.45. இந்நேரம் யாரது? கீதாவின் முகத்தில்...........


---- இமை இன்னும் திறக்கும்

1 : (என்னடா... அதுக்குள்ள தொடரும் போட்டானுக....)
2 : (அதான்.. மெகா கதன்னு ஆரம்பத்துலயே சொல்லிட்டாகல்ல.... அப்பறம்ன்ன...)
இயக்குனர் : (அய்,,,, நம்மளப்பத்தி நல்லா தெரிஞ்சி வெச்சிருக்காய்ங்கடா!)

இயக்குனர் : விபாகை

உதவி இயக்குனர்கள் : வேற யாரு.... நம்ம சமுக மக்கள் தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...