Monday, August 08, 2011

சிறகு தொலைத்த ஒற்றை வால் குருவி

அடர்ந்த இருண்ட காட்டின் நடுவே
பெருத்த இரைச்சலுடன் சென்று கொண்டிருந்தது
அந்த ஒற்றை வால் குருவி

காற்றைக் கிழித்து முன் செல்ல
சிறகுகள் சில கொடுத்து கடந்தன.

அங்கெங்கும் அலைந்தபடி பறந்தோடிய
அச்சிறகு மண் தொட்ட
அந்த நிமிடம்...
முட்களோடு விளையாடிக் கொண்டிருந்த
சிறு தேவதை பூப்பெய்தினாள்.

ஈக்களும், புழுக்களும், பூச்சிகளும்
சுற்றித்திரிந்த நாட்கள் மரித்து
வண்டுகள் பூத்திடும் நந்தவனமாயிற்று

ஒற்றை வால் குருவி
விட்டுச் சென்ற சிறகினைக் கொண்டு
தன்னை அலங்கரித்துக் கொண்டாள்
அந்த சிறு தேவதை

சிறகு தொட்டு பெண்ணான கதை கேட்காது
உதிர்ந்த சிறகின் வாசனை இல்லா
தூரத்தில் பறந்து கொண்டிருந்தது
சிறகு தொலைத்த
ஒற்றை வால் குருவி

- விபாகை ர.ராஜலிங்கம்

Wednesday, July 13, 2011

ஒரு குட்டியும்... மூன்று தெருப்பொறுக்கி நாய்களும்...


கருப்பு வழிந்து ஓடும்
அந்த குளிர்காலத் தெருவில்
உருட்டும் நீலக்கண்கொண்டு
விழிங்கி முன்னேறியது
யாரோ பெய்து போட்ட
அந்த குட்டி

ஏறியும் இறங்கியும்
காலச்சலவை செய்யச் சொன்ன
அந்த செவ்வரிக்காரியின்
முலை தீண்டும் தருணங்களில்
எங்கிருந்தோ பரவியது
யாரோ விட்டுச்சென்ற எச்சம்

விடுபட்டு
விதியென்று
சென்ற போது தான்
காடுகள் தொலைத்த
இருளாய் போனது
அந்த அகண்ட வீதி

சிக்கிய நூல்கண்டின்
நுனி தேடி அலையும்
அந்த சாமவேளையில்
எலும்புடன் சண்டையிட்டது
உயிர்த்தீ

உலைகொதிக்கும்
தூரம் காண
துகிலுரிக்கும்
எவனுக்கும் தெரியாது
உண்மைக்கும் தலைக்கும் உள்ள தூரம்.

சரணாகதி ஆனாலும்
சூத்திரம் ஜெயிக்காதிருக்க
வனம் தின்றும்
உள்ளம் விழுங்கப் பாய்ந்திடும்
அந்த
மூன்று தெருப்பொறுக்கி நாய்கள்.

- விபாகை. ர. ராஜலிங்கம்.

Tuesday, June 14, 2011

கனந்த சயனம்

படிமநினைவை
கூரிய சொல்தீட்டி
சிதற விட்டாய்.
காய்ந்த படிமங்கள்
வெந்த மனங்கள்
கனந்த சயனம்
விழி கூசும் விடயங்கள்
விடுபட்ட விழாக்களம்
புடம் போட்டாயே
நினைவினை...
இன்னும் தீண்டி
தோண்டியெடு
நான் மறவாதிருக்க.

Wednesday, May 04, 2011

அந்திம விடியல் ஆசை


அந்திம விடியலில்
காற்றில் விரைந்து
சென்று கொண்டிருந்த
அந்த சிவப்பு நாக்கை
நகம் கொண்டு
பின்னத்தொடங்கியது
கருங்குரங்கு

ஆசையென்றால்
அந்த வண்ணத்தையும்
இணைத்துக் கொள்ளேன்
என்றபோது தான்
உணரத் தொடங்கினேன்
புலர்ந்து கொண்டிருப்பது
என் மரணம் என்று.

வழிந்த பச்சை ரத்தம்
இனிக்கும் என்றாலும்
இளம் கற்கள் இங்கு
ஏன் கும்மாளமிடுகின்றன?
வழித்துக் கொண்டு
படுத்துறங்கும் பண்பாடு
பழகத் தெரியுமா
உனக்கும்... எனக்கும்...

Friday, March 11, 2011

மச்சக்காரன் - தினம் ஒரு கவிதை











தெரு முக்காடு போட்டுக்கொண்டது
பெண்கள் புசு புசுத்தனர்
ஆண்கள் மெளனமாய் அழுதனர்
உறவைத்தேடி ஒரு கூட்டம்
ஊமையாய் தேடியது.

காலையில் வீழ்ந்தது
மாலையும் கடந்தது
விட்டுவிடவும் முடியாது
வெட்டிவிடவும் முடியாது
திண்டாடியது ஒரு கூட்டம்

சரி சரி அப்படியே போடமுடியாது
காரியங்கள் விருவிருப்பாயின
சடங்குகள் சடலத்திற்கெதற்கு
சொர்க்கம் பார்க்க இன்னும்
எத்தனையோ இருக்கப்பா!

உலகம் பார்த்த உடலில்
உள்ளம் தேடிப் பார்க்கிறான்
எரிகின்ற நெருப்பின் வெப்பத்தில்
அவள் விற்ற உடலில்
'மச்சக்காரன்' பச்சையாக

அய்யய்யோ...
வெட்டியனாய் வைத்த கொள்ளி
கட்டியவனாய் முடியவில்லையே
இவன் 'மச்சக்காரன்'
தாலிக்கு சொந்தக்காரன்.

Monday, February 21, 2011

நாட்களும் நேரமும் - தினம் ஒரு கவிதை


நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.
விடியலின் புதையலை நோக்கி
வாளெடுத்து மற்றொரு பயணம்.
நாம் பயணப்படும் நோக்கு
தொலை(ந்த) நோக்காகவே !
காலம் கடந்து; கானல் நீருண்டு
காணாத கனவிது.
சிறுதுளி தஞ்சம் புகும்
தேவைகளின் தேடலில்,
நாட்களும் நேரமும்
செத்துக் கொண்டிருக்கின்றன.



Thursday, February 17, 2011

பிணத்தின் ஜனனம் - தினம் ஒரு கவிதை



விரிந்து கிடந்திட்ட
மயான இருட்டில்
சிவந்து கொண்டிருந்த
சவக்குழியில்
கனந்து இறங்கும்
விறகுகள்;
உடல் வெந்துண்டு
அனல் பரவிட
பிணத்தின் கருவறையில்
மீண்டும் ஒரு
பிணத்தின் ஜனனம்.

Friday, February 11, 2011

வீதியெங்கும் விளக்குகள் - தினம் ஒரு கவிதை

வீதியெங்கும் விளக்குகள்
இருளகற்றி
எண்ணெய் விட்டு
சுட்டெரியும் அழகு.

மண்ணெண்ணெயே இல்லா
அடுகளையில்
நல்லெண்ணெய் விட்டா
நளபாகம் உருவாகும்?

விளக்கின் அடியில்
வழித்தெடுத்தால்
ஒருவேளை உண்ணவாவது
வழி கிடைக்கும்.

உணவின் உரசலின்றி
எண் குடலும்
குருதிப்புன்னகை
பூசிக் கொண்டது.

வீதியெங்கும் விளக்குகள் !!!

Wednesday, February 09, 2011

ஆரிய குளிப்பு - தினம் ஒரு கவிதை



பனித்துளி கன்னத்தில்
சூரிய முத்தம்
வழியும் இதழில்
வாசனைச் சுத்தம்
பரவும் உடலில்
உணர்ச்சி பூகம்பம்
வெடிக்கும் பூவில்
உயிரின் சத்தம்.
ஆறிடும் தவிப்பு,
ஆரிய குளிப்பு.

Tuesday, February 08, 2011

விடிந்தன கனவுகள் - தினம் ஒரு கவிதை

காலத்தின்
சவுக்கடியில்
இரத்தக்கீறல்கள்.
ரணமும் வலியும்
சுகமாய் இருந்தன,
நினைவுத் தழும்புகள்
மறையும் வரை.
காலடிச் சத்தத்தில்
விடிந்தன கனவுகள்.
Related Posts Plugin for WordPress, Blogger...